

திருவண்ணாமலையில் மதுவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய மதுரை வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுக் கடைகளை மூடக்கோரியும், மதுக் கடைகளை மூட முடியாது என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் அநீதியை அழிக்கும் மாணவர் சக்தி அமைப்பாளருமான ஆ.நந்தினி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரும், அவரது தந்தை க.ஆனந்தன் ஆகியோர் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பின்னர், பேருந்து நிலையத்துக்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர். இதையறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார், ‘மதுவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வழங்க அனுமதி இல்லை’ என்று கூறி அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஆ.நந்தினி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். அனைத்து இடங்களிலும் போலீஸார் கைது செய்துள்ளனர். இப்போது திருவண்ணாமலையிலும் கைது செய்துள்ளனர்” என்றார்.