

பிரதமர் மோடியை அவதூறாக பேசுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த சோ.பாலகிருஷ்ணனின் மகனும், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணைத் தலைவருமான சோ.பா.ரவி, கிறிஸ்தவ பாதிரியார் டபிள்யு.சி. தாமஸ், செங்கல்பட்டு மாவட்ட அமமுக துணைச் செயலாளர் ரவி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
கரோனா பேரிடர் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
தமிழக பாஜக நேர்மறை அரசியல் செய்து வருகிறது. எந்தமதம், ஜாதி, இனம், மொழி, தனிநபரை இழிவுபடுத்தி பேசுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது. மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்தவர்கள் மீதுகாவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அதற்கு எதிர்வினையாக எந்த நிகழ்வும் நடந்திருக்காது.
பிரதமர் மோடியை ஆபாசமாக, அவதூறாக, இழிவுபடுத்துவது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற நபர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இது வருத்தம் அளிக்கிறது.