

அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவைப் போன்று, எண்ணூர் கழிமுகத்தில் ரூ.189 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது.
எண்ணூர் பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களால் எண்ணூர் கழிமுகப் பகுதி மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எண்ணூர் கழிமுகத்தில் சூழல் மீட்டெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே, அடையாறு கழிமுகப்பகுதியில் சுற்றுச் சூழல் மீட்டெடுப்புநடவடிக்கையாக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது போன்று, எண்ணூர் கழிமுகத்தில் அமைக்கவும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா 58 ஏக்கரில் அமைக்கப்பட்டது. அதுபின்னர் 358 ஏக்கராக விரிவடைந்துள்ளது. இதில் கடந்த 2014-ம் ஆண்டு 239 வகை உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. 2019-ம் ஆண்டு அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அங்கு வாழும் உயிரின வகைகளின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக எண்ணூர் மற்றும் கோவளம் கழிமுகப் பகுதிகளிலும் அடையாறு பூங்காவைப் போன்று சுற்றுச்சூழல் பூங்காக்களை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே ரூ.189 கோடியில் எண்ணூர் கழிமுகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி எண்ணூர் கழிமுகத்தில் பொதுப்பணித் துறை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. முகத்துவாரத்தில் மணல் மூடாமல் திறந்த நிலையில் நீடிக்க வைப்பது, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.
பசுமை போர்வையை அதிகரிப்பது, அங்கு வாழும் விலங்குகளின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவான சூழலை உருவாக்குவது போன்ற பணிகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொள்ள உள்ளது. இத்திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.