

2020ம் ஆண்டுக்கான ‘பஞ்சு பரிசில்’ விருதுக்கு ‘உடலரசியல்’ திறனாய்வு நூலை எழுதிய எழுத்தாளர் ஜமாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கியமும் திறனாய்வும் பிரிக்க முடியாதவை. ஆனால் இலக்கியத்திற்குப் பரிசு கொடுக்கும் அமைப்புகள் ஏராளம் உள்ளன. திறனாய்வு செய்வோருக்கு பரிசு கொடுக்கும் அமைப்பு இல்லை இதை உணர்ந்த திறனாய்வாளர் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவர் பெயரிலேயே ‘பஞ்சு பரிசில்’ என்ற பெயரில் விருது அளித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் க.பஞ்சாங் கத்தின் பிறந்த மாதமான பிப்ரவரி மாதத்தில் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூ 10 ஆயிரம், கேடயம் பரிசாகக் கொடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அதன்படி 2019-ம்ஆண்டு முதல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.
2020-ம் ஆண்டுக்கான சிறந்ததிறனாய்வு நூலாக எழுத்தாளர் ஜமாலன் எழுதியுள்ள ‘உடலர சியல்’ என்ற திறனாய்வு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசு வழங்கும் நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்ந்து புதுச்சேரிப் பேராசிரி யர்களுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது. அமெரிக்காவின் விளக்கு அமைப்பு பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் திறனாய்வுப் பணியினைப் பாராட்டி புதுமைப் பித்தன் நினைவு விருதினை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அளித்ததுடன் ஒரு லட்ச ரூபாயும் பட்டயமும் வழங்கப்பட்டன. இதே போல்,பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகருக்கு பிரெஞ்சுஅரசின் ரோமன் ரோலன் மொழியாக்கப் பரிசு கொல்கத்தா இலக்கிய விழாவில் வழங்கப்பட்டது. விருது பெற்ற பேராசிரி யர்களுக்குப் பாராட்டுவிழா மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.