

வெள்ள நிவாரணத்தை முறையாக வழங்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நேற்று நடை பெற்ற மார்க்சிஸ்ட் மாநில செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப் புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டங்களில் வழக்கமாக நடத்தப்படும் அனைத் துக் கட்சி கூட்டங்கள் நடைபெற வில்லை. மழை வரும்வரை அமைதியாக இருந்ததால் நாசமும், நஷ்டமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சில ஆண்டுகளாக ஏரிகள், குளங்கள், பாசன வடிகால்கள் தூர்வாரப்படாததே அழிவுக்கு காரணம். இதற்கு திமுக, அதிமுக அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.
நிவாரண உதவிகள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள புகார்களை கணக்கில்கொண்டு அனைத்துக் கட்சி குழு, உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக வெள்ள சேதத்துக்கு ஒட்டுமொத்த நிதியாக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம், அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.