

கீழக்கரை அருகே செயல்படும் இயற்கை எரிவாயு சேகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கீழக்கரை ரகுநாதபுரத்தில் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஊருணி உள்ளது. இந்த ஊருணியின் நீர்பிடிப்புப் பகுதியை ஓஎன்ஜிசி நிறுவனம் ஆக்கிரமித்து 10 இடங்களில் துளையிட்டு இயற்கை எரிவாயு சேகரித்து வருகிறது. எரிவாயு சேகரிப்பு நிலையமும் அமைத்துள்ளனர். இப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி ஊருணிக்கு தண்ணீர் செல்லும் பாதையை அடைத்துள்ளனர்.
இந்த எரிவாயு சேகரிப்பு நிலையம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 25 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும். தற்போது இயற்கை எரிவாயு சேகரிப்பு நிலையத்தை பிற எரிவாயு சேகரிப்பு நிலையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இயற்கை எரிவாயு எடுக்கத் தடை விதித்து, பெரிய ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.