

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சி பாஜக என்பதை நிரூபிப்போம் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக கோவையில் இன்று (பிப்.3) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், கூட்டமாகச் சேர்ந்தால் போலீஸாரை பயமுறுத்த முடியும் என நினைக்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் பிரதமரைத் தவறாகச் சித்தரித்து ஊர்வலம் நடைபெற்றபோது போலீஸார் ஏதும் சொல்லவில்லை.
இதுபோன்ற விஷயங்களைத் தடுப்பதில் காவல்துறை இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். காவல்துறை உறுதியாக இருந்திருந்தால் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. தெலங்கானா, பிஹார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சியில் பாஜக முதலிடத்தில் உள்ளது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதை நிரூபிப்போம். ஏனெனில், பாஜகதான் அவர்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்துள்ளது. அதனால்தான் சில அமைப்புகள் பயப்படுகின்றன.
அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும், பிரதமரை விமர்சிப்பதும் தவறு கிடையாது. ஆனால், அவை வரைமுறைக்குள் இருக்க வேண்டும். ஆனால், கோவையில் சில நாட்களாக வரைமுறையைத் தாண்டிவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.
தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் வேலைசெய்ய வேண்டும்''.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.