ஆணவக் கொலைகளைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு, டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆணவக் கொலைகளைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு, டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு, காவல்துறை டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவைத் தொட்ங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழகம் ஆணவக் கொலைகள் இல்லாத மாநிலமாக மாறியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, கோவை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, மணப்பெண் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன்பின் அப்பெண் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும், அவர் உடல் உடனடியாக பெற்றோரால் எரிக்கப்பட்டுவிட்டதும் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் எனவும் மனுவில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அதனால் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in