Last Updated : 03 Feb, 2021 03:25 PM

 

Published : 03 Feb 2021 03:25 PM
Last Updated : 03 Feb 2021 03:25 PM

செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே வழித்தட மின்மயமாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிகாரிகள் பதில்

திருநெல்வேலி

செங்கோட்டை- திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

டீசல் பயன்பாட்டை குறைக்கவும் காற்று மாசுப்பாட்டை குறைக்கவும் இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் ரயில் வழித்தட மின்மயமாக்கல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. மீதமுள்ள தமிழக வழித்தடங்களை மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தெற்கு ரயில்வேயில் மதுரை - மானாமதுரை, சேலம் - கடலூர், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுர், ஷோரனுர் - நிலாம்பூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் ரூ. 587.53 கோடி மதிப்பீட்டில் 985 கிமீ நீளத்துக்கு மின் மயமாக்கல் பணிக்கு கடந்த 2019- ம் ஆண்டு ஜனவரி மாதம் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மின் மயமாக்கல் பணிகளின் முன்னேற்றம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மத்திய ரயில்வே மின் மயமாக்கல் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு அதிகாரிகள் அளித்துள்ள பதில்:

மதுரை - மானாமதுரை - ராமநாதபுரம் - மண்டபம் வழித்தடம் மதுரையில் இருந்து மானாமதுரை வரை 46 கிமீ இந்த மாதமும், மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை 59 கிமீ இந்த ஆண்டு ஜூன் மாதமும், ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை 37 கிமீ இந்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின் மயமாக்கல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தடத்தில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் மானாமதுரை மற்றும் ராமநாதபுரத்தில் அமைக்கப்படவுள்ளது.

செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வரை 72 கிமீ மார்ச் 2022, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரை 61 கிமீ மார்ச் 2022-ல் மின் மயமாக்கல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடத்தில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் வீரவநல்லூர் மற்றும் ஆறுமுகனேரியில் அமைக்கப்படுகின்றன.

திருச்சி - மானாமதுரை - விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வரை 53 கிமீ இந்த ஆண்டு ஏப்ரல் மாதமும், புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை 37 கிமீ வரும் ஆகஸ்டிலும், காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை 63 கிமீ வரும் அக்டோபர் மாதமும், மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரை 61 கிமீ வரும் டிசம்பர் மாதமும், விருதுநகரில் இருந்து தென்காசி வரை 122 கிமீ 2022 - ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் மின் மயமாக்கல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் காரைக்குடி, மானாமதுரை மற்றும் ராஜபாளையத்தில் அமைக்கப்படுகின்றன.

திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுர் வழித்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடு வரை 179 கிமீ மார்ச் 2022, பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை 38 கி.மீ வரும் ஏப்ரல் மாதமும் மின் மயமாக்கல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடத்தில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் கோமங்கலம் மற்றும் பழனியில் அமைக்கப்படுகிறது. ஜனவரி 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்படும்போது 30 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 2022 ஜூலையில் முடிக்கப்படவேண்டும்.

கரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் பணியில் தடங்கல் ஏற்பட்டதால் 2 மாதங்கள் தாமதமாக செப்டம்பரில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, மின்மயமாக்கலால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களான பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் மற்றும் செந்தூர் ரயில்களில் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.

திருநெல்வேலியை மையமாக வைத்து தென்காசி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மெமு ரயில்கள் அதிகமாக இயக்க முடியும். 2004 - ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட விருதுநகர் தென்காசி வழித்தடத்தில் 17 ஆண்டுகள் கடந்த பின்னர் இப்பொழுது தான் மின்மயமாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x