

திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரேநேரத்தில் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமிகளின் ஆஸ்ரமத்தில், தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனைவிழா விமரிசையாக நடைபெறுவதுவழக்கம். இந்த விழா வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த விழாவை 2 நாட்கள் மட்டும்நடத்த சபா சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது.
தொடர்ந்து, நேற்று காலை 5.30மணிக்கு திருமஞ்சன வீதியில்உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி தியாகராஜர் நினைவிடத்துக்கு இசைக்கலைஞர்கள் வந்தனர்.
தொடர்ந்து, காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு, பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றவுடன், விழாவில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் காலை 10 மணி வரைஒரேநேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தப்பட்டன.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், முஷ்ணம் வி.ராஜாராவ் உட்பட ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவுபெற்றதும், நாதஸ்வர கச்சேரியும் அதைத்தொடர்ந்து, உபன்யாசமும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் சிலை ஊர்வலம், ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ஆராதனை விழா நிறைவடைந்தது.
இந்த விழாவில், மத்திய சாலைபோக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மனைவி காஞ்சனா கட்கரி, தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) தீபக் எஸ்.கிருபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.