

கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.1,655 கோடிக்கு போலியான ரசீதுகள் கொடுத்து ரூ.216 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மண்டல ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 7 பேருடன் இணைந்து தொழில் செய்வதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அந்தப் போலி நிறுவனங்கள் பெயரில், ரூ.350 கோடிக்கு போலி ரசீது தயார்செய்து, ரூ.64 கோடி ஜிஎஸ்டி வரிச்சலுகை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
2020-ம் ஆண்டு நவம்பர் வரை இதுபோல ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1,655 கோடிக்கு போலிரசீதுகள் தயார் செய்து ரூ.216 கோடி வரை வரிச்சலுகை பெற்று அவர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
போலி ஆவணம் மூலம் பெறப்படும் வரிச்சலுகை மோசடி செய்வதற்கு இணையானது. அதற்கு 5ஆண்டு வரை சிறைத் தண்டனைவழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.