ஆளுநர் உரை மீதான விவாதம்; பிப்.5 வரை 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

ஆளுநர் உரை மீதான விவாதம்; பிப்.5 வரை 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் வரும் பிப்.5-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். பின்னர், அதன் தமிழாக்க உரையை பேரவைத் தலைவர் பி.தனபால் வழங்கினார். இந்த நிகழ்வுகள் பிற்பகல் 1.05 மணிக்கு முடிவுற்ற நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் பி.தனபால் தலைமையில் நடைபெற்றது.

ஆளுங்கட்சி தரப்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர்பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா தாமரை ராஜேந்திரன் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

கூட்ட முடிவில், பேரவைத் தலைவர் பி.தனபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிப்.3 (இன்று) சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். தொடர்ந்து, அமைச்சர் இரா.துரைக்கண்ணு, பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அத்துடன் அவை ஒத்திவைக்கப்படும்.

பிப்.4-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும். பிப்.5-ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதமும் பதிலுரையும் அளிக்கப்படும். சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். இதர அலுவல் இருந்தால் அவையும் நடைபெறும். அவை வழக்கம்போல காலை 10 மணிக்கு கூடும்.

பேரவையில் 3 தலைவர்களின் படத்திறப்பு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து அரசிடம் இருந்து தகவல் வரவில்லை. வந்த பிறகு அறிவிக்கப்படும்.

எதிர்க்கட்சியினர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். வரவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனிடம் கேட்டபோது, நாங்கள் ஆளுநர் உரை மீதான விவாத கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in