Published : 12 Nov 2015 03:37 PM
Last Updated : 12 Nov 2015 03:37 PM

கோவை வியாபாரிகளை கவலையில் ஆழ்த்திய தீபாவளி பட்டாசு வியாபாரம்

தீபாவளிக்கு கோவையில் பட்டாசு வியாபாரம் மிக மந்தமாக நடந்ததாக தெரிவிக்கின்றனர் பட்டாசு வியாபாரிகள்.

பஞ்சாலை, நூற்பாலை, பவுண்டரி, குறு, சிறு தொழிற்சாலைகளும் அது சார்ந்த தொழிலாளர்களும் நிறைந்த பகுதி கோவை. வருடந்தோறும் தீபாவளிக்கு போனஸ் கைநிறையக் கிடைப்பதால் ஜவுளி, பலகாரம், பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதும். சிறிய அளவிலான தெருவோரக் கடைக்காரர்கள் முதல் பெரிய அளவிலான டிபார்ட்மென்ட் ஸ்டோர்காரர்கள் வரை பட்டாசு வியாபாரத்தில் நஷ்டப்பட்டது இல்லை.

கோவை மாநகரத்தில் 250, புறநகர் பகுதியில் 240 பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுக்கடைகளில் வணிகவரித் துறையினர் சோதனை நடத்தினர். விற்பனை வரி செலுத்தாத, பதிவு செய்யாமல் கடைவிரித்தவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டு முன்கூட்டியே வரி வசூலில் ஈடுபட்டனர். முன்கூட்டியே நகரத்தில் மட்டும் ரூ.5 லட்சம் வரை வரி வசூலானது.

இந்த சூழ்நிலையில் தீபாவளிக்கு முன் மூன்று நாட்களிலும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. பொதுவாக இந்த நாட்களில்தான் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்கும். மழை கொட்டித் தீர்த்ததால் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள சிலரைத் தவிர பிற கடைக்காரர்களுக்கு வியாபாரம் இல்லை என்கின்றனர் வியாபாரிகள்.

இதுகுறித்து கோவையில் நீண்டகாலமாக பட்டாசு வியாபாரம் செய்துவரும் சிலர் கூறியதாவது.

கோவை மாநகரத்தில் பெரும்பாலான பட்டாசுக் கடைக்காரர்கள் தாங்கள் விரித்த சரக்கில் மூன்றில் இரண்டு பகுதியை மூட்டைகட்டவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கு மழை மட்டும் காரணம் இல்லை. கடந்த வருடங்களிலும் தீபாவளி நாளில் மழை பெய்துள்ளது. அப்போது இப்படி வியாபாரம் நஷ்டப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வழக்கம்போல் போனஸ் இல்லாததே காரணம்.அதேபோல் ஜவுளி, விசைத்தறி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமும் பணப் புழக்கம் இல்லாததால் மிக எளிமையாகவே தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

எளிமைக்கு முதலில் அவர்கள் துண்டித்த செலவு பட்டாசுதான். இதைத்தவிர, ஓரளவு வசதிபடைத்தவர்கள் சிலர் சேர்ந்து சிவகாசிக்கு சென்று பட்டாசுகளை வாங்கிவிட்டனர். சிவகாசியில் ரூ.2 லட்சத்துக்கு நாங்கள் பட்டாசு வாங்கினால் அதை ரூ.50 ஆயிரம் செலவு செய்து ரூ.7 லட்சம் வரை விற்போம். அதை நேரடியாக சிவகாசிக்கு மக்கள் சென்று வாங்கி, தேவைபோக அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும் விலைக்கு விற்று விடுகின்றனர். இவ்வளவு விலைகுறைவாக பட்டாசு கிடைப்பதால் நடுத்தர வர்க்கத்தினரும் பட்டாசுக் கடைகளுக்கு வருவதில்லை. இந்த காரணங்களால்தான் இந்த ஆண்டு பட்டாசு வியாபாரம் படுத்துவிட்டது. இப்போது மீதியாகியிருக்கும் பட்டாசுகளை அடுத்த ஆண்டு விற்பனை செய்தால்தான் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில்லா தீபாவளி

கோவை மண்டலத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டும், தீபாவளி விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன.

பொள்ளாச்சி, மின்நகர் பகுதியில் ராக்கெட் ரக பட்டாசு விட்டதில், தென்னை மரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அணைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பகுதியில் பட்டாசு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

கோவை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் எஸ்.ஆர்.சந்திரன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் அசம்பாவிதமோ, தீ விபத்தோ ஏற்படவில்லை. விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க பிரச்சாரங்களால் விபத்தில்லா தீபாவளியாக இருந்தது’ என்றார்.

மேற்கு மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குநர் ஷாகுல்அமீது கூறியதாவது: தீபாவளியன்று கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்றும், சேலத்தில் 1 என மொத்தம் 10 தீ விபத்துகள் சிறிய அளவில் நடந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராக்கெட் பட்டாசு விழுந்ததில் கோயில் கூரை எரிந்தது. சேலத்தில் பட்டாசு வெடித்ததில், வீட்டில் தீப்பிடித்தது. தருமபுரியில் ராக்கெட் ரக பட்டாசு விழுந்ததில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்தன.

பட்டாசு விபத்து காயம் காரணமாக இம்மாவட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக 2 ஆண், 3 பெண் என 5 பேரும், வெளிநோயாளிகளில் 43 ஆண்கள், 4 பெண்கள் என 47 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தீபாவளியன்று வந்த உயிர் மீட்பு அழைப்புகளில் 14 பேர் காப்பாற்றப்பட்டனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x