வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க சதி: பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து

வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க சதி: பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து
Updated on
1 min read

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்ஸம் அமைப்பு சார்பில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான `மோடி முகாம்’ கோவை ராஜவீதியில் நேற்று நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறும்போது, “கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டிலும் இதுபோன்ற மோடி முகாம் வரும் 21-ம் தேதி வரை நடைபெறும். பிரதமரின் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே இந்த முகாமின் நோக்கம்" என்றார்.

அண்ணாமலை கூறும்போது, “கடந்த 26-ம் தேதி 2 அமைப்புகள் நடத்திய நிகழ்வில் பிரதமரை அவதூறாக சித்தரித்துள்ளனர். அதைக் கண்டித்து பாஜகவினர் மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் பேசியது சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமரை விமர்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் கல்வீசி தாக்கியவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக, எந்த ஒரு மத நம்பிக்கையையும் அவமானப்படுத்தும் கட்சி அல்ல. கல்யாண ராமன் பேசியது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் வன்முறையை உருவாக்கி, தேர்தலை சந்திக்க வேண்டும் என சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் கொடைக்கானல், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in