

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்டமானுபட்டி ஊராட்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமமான இப்பகுதியில் ஏராளமானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குள்ள நூற்றுக்கணக்கான ஓடைகளில், பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் அடித்துவரப்பட்ட மணல் பல அடி உயரத்துக்கு குவிந்துள்ளது. இந்நிலையில் சின்னகுமார பாளையம், ராமேகவுண்டன்புதூர் கிராமங்களைச் சேர்ந்த சிலர், பொக்லைன், டிராக்டர் உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘மணல் கடத்தலை தடுக்கும் பணியில் வருவாய்த் துறை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் அத்துறையினரின் கண்காணிப்பு இல்லாததால், கடந்த ஓராண்டாகவே இங்குள்ள பல்வேறு ஓடைகளில் மணல் கடத்தல் தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து மானுபட்டி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கூறும்போது, ‘‘மானுபட்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள ஓடையில் இருந்து மணல் கடத்தல் நடைபெற்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவில் மர்ம நபர்கள் சிலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் வருவாய் ஆய்வாளருடன் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அருகில் உள்ள சிலர் சொந்த பயன்பாட்டுக்காக மணல் கடத்தியிருக்கலாம். எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.