

*
தமிழகம் முழுவதும் 1,061 சித்த மருத்துவப் பிரிவுகளில் 5 நாட் களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத் துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனை களில் 1,061 சித்த மருத்துவப் பிரிவு கள் செயல்படுகின்றன. பொது மக்களுக்கு மழைக் காலங் களில் ஏற்படும் காய்ச்சல், தொற்று நோய்களை கட்டுப்படுத்த முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சித்த மருத்துவப் பிரிவு களிலும் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை தண்டை யார்பேட்டை புறநகர் மருத் துவமனையில் நிலவேம்பு குடிநீர் மையத்தை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
தொற்று நோய்களை குணப்படுத்த நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, சித்த மருத்துவத் துறை சார்பில் 9 வகையான மூலிகைகள் கலந்த நிலவேம்பு குடிநீர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 1,061 சித்த மருத்துவப் பிரிவுகளில் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். இதன்மூலம் தினமும் சுமார் 1.20 லட்சம் பேர் பயன்பெறுவர். தொற்று நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு சித்த மருத்துவப் பிரிவுகள் மற்றும் மழைக்கால சிறப்பு முகாம்களில் நிலவேம்பு குடிநீரை இலவசமாக பருகி காய்ச்சல், தொற்று நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரும், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டாக்டர் எம்.பிச்சையா குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.