நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட குளங்களுக்கு ஐரோப்பிய, மங்கோலியப் பறவைகள் வருகை
மங்கோலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்களுக்கு பறவைகள் அதிளவில் வந்துள்ளன.
தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி, மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில் 3 நாட்கள் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய நாடுகள், மங்கோலியா மற்றும் இமயமலையில் இருந்து பறவைகள் அதிகளவில் வந்திருப்பது கண்டறியப்பட்டது. இது, பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பறவை ஆராய்ச்சியாளர் மு.மதிவாணன் கூறியதாவது:
பூமியிலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன்மிக்க வரித்தலை வாத்துகள் சிவந்திப்பட்டி குளத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. மங்கோலியாவிலிருந்து இவை இங்கு வந்திருக்கின்றன. திருநெல்வேலி பகுதியிலுள்ள குளங்களில் நாமத்தலை வாத்து, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன் போன்ற பறவைகள் காணப்படுகின்றன. இவை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை. தைலான் குருவி, ஆலா போன்ற பறவைகள் இமயமலை பகுதிகளில் இருந்து வந்து கூடு கட்டியிருக்கின்றன.
திருநெல்வேலி நயினார்குளத் தின் கரையிலுள்ள மருதமரம், இலுப்பை மரங்களில் பாம்புத்தாரா பறவைகளின் நூற்றுக்கணக்கான குஞ்சுகளை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இப்பகுதியிலுள்ள பனைமரங்களில் சாம்பல் நாரை வகை பறவைகள் அதிகமிருந்தன. இவ்வாண்டு அவற்றை பார்க்க முடியவில்லை. இதுபோல், நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்க்காகங்களின் கூடுகளும் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் அதிகம் தென்பட்டன.
தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், சமீப காலமாக இப்பறவைகள் வருகை புரியும் குளங்கள் ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல், ஆகாயத்தாமரை செடிகளின் பெருக்கம், நீர்நிலைகளின் கரைகளை திறந்தவெளி கழிப்பிடமாக்குதல் போன்ற காரணங்களினால் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான குளங்களில் மதுபாட்டில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு நீர்நிலைகளை நாசம் செய்வதையும், பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையும் தடுக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
