

நீலகிரி மாவட்டம் மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த ரிவால்டோ என்ற காட்டு யானையை கும்கி யானைகள் மற்றும் மயக்க ஊசி எதுவும் இல்லாமல் வனத்துறை ஊழியர்களின் உதவியுடன் தெப்பக்காடு முகாமுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதியான மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் துதிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக லேசான குறைபாட்டுடன் இருக்கிறது.
பெரும்பாலும் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளைச் சுற்றியே வலம் வரும் இந்த யானைக்குத் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சிலர் சட்டவிரோதமாக உணவளித்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இந்த யானைக்கு உணவளித்து, தங்கும் விடுதியின் அருகில் வரச் செய்து காட்சிப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி காட்டு யானைக்குச் சிலர் தீ வைத்ததால் யானை இறந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல் ரிவால்டோவுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வனத்துறையினர், இன்று அந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தாமல் கரும்பு மற்றும் பழங்களைக் கொடுத்து, முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்துக் காலை முதல் 35 பேர் கொண்ட வனக்குழு தேடுதல் பணியில் ஈடுபட்டது. யானை வாழைத்தோட்டத்தின் அருகே இருப்பதை மதியம் கண்டுபிடித்தனர். ஓய்வு பெற்ற வனக்காப்பாளர் கணேசன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர் பண்டன் ஆகியோர் யானைக்குப் பழங்களைக் கொடுத்து நன்கு பழகியதால் அவர்களே யானையை முதுமலைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். அன்னாசி, தர்பூசணி, கரும்பு, வாழை ஆகிய பழங்களை யானைக்குக் கொடுத்து மெதுவாக காட்டின் வழியாக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்துச் சிங்காரா வனச் சரகர் காந்தன் கூறும்போது, 'இன்று மாலை வரை யானையை மூன்று கி.மீ. தூரம் அழைத்து வந்துள்ளோம். இரவில் யானை எங்கும் போய் விடாதபடி, அதற்கு உணவு கொடுத்து அங்கேயே தங்க வைத்த பின்னர், காலை மீண்டும் முதுமலைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்வோம்’ என்றார்.
முதுமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் செண்பகப் பிரியா கூறும்போது, ''ரிவால்டோ யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மயக்க ஊசி செலுத்தினால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதனால், மயக்க ஊசி செலுத்தாமல் முதுமலைக்குக் கொண்டு வரப்பட்டு கூண்டில் அடைத்து, பழக்கப்படுத்தி வளர்ப்பு யானையாக மாற்றப்படும்'' என்றார்.