

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அதை எதிர்த்தும் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மேலும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால், ரயில்வே ஊழியர்களைத் தாண்டி பொதுமக்கள் என்னென்ன பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் எஸ்ஆர்எம்யு விளக்கி வருகிறது.
அந்தவகையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில், ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் பொதுமக்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து அச்சிடப்பட்ட அறிக்கை விநியோகிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், “மிகப்பெரிய கட்டமைப்பான ரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், சேவை பின்னுக்குப் போய், லாப நோக்குடன் மட்டுமே செயல்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மறுக்கப்படும். முன்பதிவற்ற பெட்டிகள் நீக்கப்படும்.
ரூ.200-லிருந்து ரூ.3,000 ஆக ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதுபோல் அனைத்து ரயில் கட்டணங்களும் உயர்த்தப்படும். சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். நடைமேடைக் கட்டணம் கட்டுப்பாடின்றி உயர்த்தப்படும். பயணச்சீட்டை கேன்சல் செய்யும் பட்சத்தில் கட்டணம் திருப்பித்தரப்பட மாட்டாது.
ரயில்வே துறையில் அடித்தட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படும் நிலை உருவாகி, நடுத்தர, அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவர்” என்பன உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்டச் செயலாளருமான எஸ்.வீரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கினால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் நேரிடும் பேராபத்தை உணர்ந்துதான் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.கண்ணையா, தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர் ஆகியோர் உத்தரவின் பேரில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், சிறு- குறு வணிகர்கள், ஆட்டோ- வேன்- லாரி ஓட்டுநர்கள் ஆகியவற்றின் சங்கங்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசியல் கட்சிகள் சாராத தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, “இந்திய ரயில்வே துறையைத் தனியாரிடமிருந்து பாதுகாப்போம்” என்ற கூட்டுப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டு, அதன் அடித்தளமாக இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவோம் என்று மத்திய அரசு விடாப்பிடியாக இருந்தால், அதைத் தகர்த்தெறியும் வகையில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.