Published : 02 Feb 2021 06:07 PM
Last Updated : 02 Feb 2021 06:07 PM

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தடுப்பணைகள்; கேரள, கர்நாடக அரசுகள் கட்ட அனுமதிக்கக் கூடாது: ஆளுநர் உரை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகேதாட்டு திட்டத்தை நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு, கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என ஆளுநர் உரையில் கோரப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து வெளிநடப்பு செய்தன. ஆளுநர் உரையில் நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசுக்குக் கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் உரையில் கூறியதாவது:

“மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை, இந்த அரசு தொடர்ந்து தீவிரமாகப் பாதுகாக்கும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் செயல்படுத்த வேண்டும் என்ற இந்த அரசு எடுத்த முழு முயற்சியின் காரணமாக, மத்திய அரசு, ‘காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்’ மற்றும் ‘காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை உள்ளடக்கி ‘காவிரி நதி நீர் மேலாண்மைத் திட்டம் 2018-ஐ’ மத்திய அரசிதழில் 1-6-2018 அன்று வெளியிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறியும், தமிழ்நாடு அரசின் அனுமதியின்றியும், காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே யாதொரு நீர்த்தேக்கத்தையோ அல்லது திசை திருப்பும் அமைப்புகளையோ கர்நாடக அரசு கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகேதாட்டு திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

* உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு, கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசையும், கேரள அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.

முதல்வர் முயற்சியால், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மற்றும் ஏனைய நதிநீர்ப் பிரச்சினைகளில் இணக்கமான உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள், அலுவலர்கள் மட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, 1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்திலுள்ள விதிமுறைகளின் கீழ், தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம்”.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x