பெண் என்பதால் அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை: பிடிஓ-க்களுக்கு எதிராக கறம்பக்குடி ஒன்றிய தலைவர் வழக்கு- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

பெண் என்பதால் அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை: பிடிஓ-க்களுக்கு எதிராக கறம்பக்குடி ஒன்றிய தலைவர் வழக்கு- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

பெண் என்பதால் அரசு விழாக்களுக்கு அழைக்க மறுக்கின்றனர். முக்கிய ஆவணங்களை தர மறுக்கின்றனர், தீர்மானங்களை திருத்துகின்றனர் என கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எதிராக ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு உறுப்பினராக வெற்றிப்பெற்றேன். பின்னர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டங்கள்), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இருவரும் என்னை தலைவருக்கான பணியை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய முக்கிய ஆவணங்களை பார்வையிட தர மறுக்கின்றனர். ஊராட்சி ஒன்றிய கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அழித்து, அதற்கு பதிலாக கூட்டத்தில் விவாதிக்கப்படாத தீர்மானங்களை சேர்த்து மோசடி செய்கின்றனர். ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் திறப்பு விழாவில் என்னை அழைப்பதில்லை. அவர்களாகவே திறப்பு விழா நடத்தி முடிக்கின்றனர்.

பெண் என்பதாலும், எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பதாலும் இரு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் என்னை புறக்கணித்து வருகின்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சி ஒன்றிய பணிகளை திறக்கவும், மேற்பார்வையிடவும் ஒன்றிய தலைவருக்கு அதிகாரம் உண்டு. அரசின் அனைத்து தகவல் தொடர்புகளும் ஊராட்சி தலைவர் வழியாகவே நடைபெற வேண்டும். அரசு விழாக்களில் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அரசாணையே உள்ளது. இருப்பினும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேண்டும் என்றே என்னை புறக்கணிக்கின்றனர்.

எனவே, யாருடைய இடையூறு இல்லாமல் நான் தலைவராக பணியாற்ற அனுமதிக்கவும், அரசு விழாக்களில் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணை விதிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in