

‘‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றமே முடிவு எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து முடிவை ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையில்லாதது,’’ என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை நீதிமன்றமே முடிவு செய்திருக்க வேண்டும். இந்த முடிவை ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையல்லாதது.
மேலும் இப்பிரச்சினையை வைத்து திமுக ,காங் கண்ணாமூச்சி ஆடுகிறது. திமுக 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் காங்., 7 பேரை விடுதலை செய்யக்கூடாது எனக் கூறுகிறது. இதில் திமுகவும், காங்கிரஸும் கூட்டு சதி செய்கிறது. இருகட்சிகளும் முதலில் ஒரே கருத்துக்கு வர வேண்டும்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தான் முடிவு செய்ய வேண்டும். சசிகலா தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், ஊடகங்கள் ஏன் கவலைபடுகிறது என்று தெரியவில்லை.
அதைப்பற்றி பேசுவதும், விவாதிப்பதும் தேவையில்லாதது. ஊடகங்கள் மிகைப்படுத்திய ரஜினி அரசியலுக்கு வராதது போல சசிகலா வருவாரா? வர மாட்டாரா? எனப் பொறுத்திருந்து பாருங்கள்.
இந்து மதத்தை இழிவாகப் பேசிய வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது. மேலும் மற்றவர்கள் கூறுவது போல தமிழக அரசு பாஜக கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் வைரமுத்துவை கைது செய்திருக்கும். கல்யாணராமனை கைது செய்திருக்காது.
தமிழகத்தில் இந்துக்கள் மீதான பாரபட்சத்தை ஒரு போதும் ஏற்க முடியாது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டிக்க, கட்டுப்படுத்த காவல்துறைக்கு துப்பில்லை. மேட்டுப்பாளையத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்யாததை வண்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக காவல்துறை பாரபட்சமாக நடந்து கொண்டால் கலவர சூழ்நிலையை உருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்துகள் மனதிலே வந்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.