Published : 14 Nov 2015 05:13 PM
Last Updated : 14 Nov 2015 05:13 PM

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டச் செயல்பாட்டில் ஊழல், முறைகேடுகள் மலிந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வப்போது சுட்டி காட்டியுள்ளது.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தும், வேளாண் உற்பத்தியில் அபிவிருந்தியும் கண்டுள்ள முன்னோடி திட்டமான வேலை உறுதியளிப்புத் திட்டத்தை வெளிப்படையான நிர்வாகத்தில், ஊழல், முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் செயல்படுத்துமாறு பல இடங்களில் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஆனால், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சீர்குலைத்து ஆளுங்கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுயநல அலுவலர்களின் கூட்டு திட்டநிதியை அபகரித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் எருமார்பட்டி மற்றும் மண்ணூர் ஆகிய இரு கிராமங்களில் மட்டும் போலி வேலைஅட்டை தயாரித்து ரூ 30 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்தை சமூக தணிக்கை சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப்பகல் கொள்ளைக் குற்றத்துக்கு தினக்கூலி பணியாளர்களை பலிகொடுத்துவிட்டு, உயர்நிலையில் உள்ள குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குற்றச் சம்வம் நடந்த காலத்தில் இருந்த அலுவலர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள வேலைகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்குகளை சரிபார்த்து, நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x