தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச தரவு அட்டை திட்டம் தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைத்தார்; தினமும் 2 ஜிபி ‘டேட்டா’ கிடைக்கும்

தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச தரவு அட்டை திட்டம் தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைத்தார்; தினமும் 2 ஜிபி ‘டேட்டா’ கிடைக்கும்
Updated on
1 min read

இணைய வழி வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 9.69 லட்சம் பேருக்கு தினமும் 2ஜிபி தரவு (டேட்டா) கிடைக்கும் வகையில் இலவச தரவு அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இணைய வழி வகுப்புகள்

‘கரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனுக்காக இணையவழி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9.69 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 4 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி தரவு (டேட்டா) கிடைக்கும் விதமாக, எல்காட் நிறுவனம் மூலம் இலவச தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த 8-ம் தேதி அறிவித்தார்.

இதன்படி, இணைய வழி வகுப்புகள் மூலம் சிறந்த முறையில் கல்வி கற்க, அரசு மற்றும்அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச தரவு அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்றுதொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 9 மாணவர்களுக்கு தரவு அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு மின்னணுநிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டி.ரவிச்சந்திரன், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in