திருமண விழாவில் மறைந்த தந்தையின் தத்ரூப சிலை: தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் மருத்துவர்

பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தனது தந்தையின் சிலை முன் (நடுவில் வேட்டி சட்டையுடன்) மாலை மாற்றிக்கொள்ள தயாராக நிற்கும் லட்சுமி பிரபா-கிஷோர் மற்றும் உறவினர்கள்.
பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தனது தந்தையின் சிலை முன் (நடுவில் வேட்டி சட்டையுடன்) மாலை மாற்றிக்கொள்ள தயாராக நிற்கும் லட்சுமி பிரபா-கிஷோர் மற்றும் உறவினர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் செல்வம்(61). தொழிலதிபர். இவரது மனைவி கலாவதி. கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் இறந்து விட்டார்.

செல்வம் உயிருடன் இருந்தபோது, தனது 3 மகள்களில் 2 மகளுக்கு திருமணம் செய்து முடித்து விட்டார்.

இந்நிலையில், 3-வது மகள் லட்சுமி பிரபாவுக்கும்(25), கிஷோர்(26) என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தனது திருமணத்தின்போது தந்தை இல்லையே என லட்சுமி பிரபா வருத்தத்துடன் இருந்துள்ளார்.

இதையறிந்த லண்டனில் மருத்துவராக உள்ள மூத்த சகோதரி புவனேஸ்வரி (37), தனது கணவர் கார்த்திக் உதவியுடன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்த்தின் மூலம் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு, தனது தந்தை செல்வத்தின் முழு உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார்.

இதையடுத்து, பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தங்கை லட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின்போது, தந்தை செல்வத்தின் முழுஉருவச் சிலையை புவனேஸ்வரி மேடையில் நிறுத்திவைத்து, தனது தங்கையும் மணமகளுமான லட்சுமி பிரபாவுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். தந்தையின் சிலையை பார்த்த லட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர், அந்த சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி கூறும்போது, ‘‘எனது திருமணத்தை எங்களின் தந்தை சிறப்பாக நடத்தினார். ஆனால், எனது கடைசி தங்கையின் திருமணத்தின்போது தந்தை இல்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. குறிப்பாக எனது தங்கை லட்சுமி பிரபா வருத்தத்துடன் இருந்தார். இதனால், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் செலவில், தந்தையின் சிலையை உருவாக்கினோம்சிலை தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அங்கு சென்று சிலையை பார்வையிட்டோம். இந்த சிலையை கண்ட எனது தங்கை ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தத்ரூபமான சிலையை பார்த்த உறவினர்கள் சில நிமிடம் கண்கலங்கினர்’’ என்றார்.

தங்கைக்காக தந்தையின் சிலையை தத்ரூபமாக வடித்து எடுத்து வந்த சகோதரியின் செயல், திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in