

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் போட்டியிடாது, அதிக இடங்களில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம், கோவை செல்வபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சரத்குமார் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
1996-ல் திமுக ஆட்சியைப் பிடிக்க நானும் ஒரு முக்கிய காரணம். ஆனால், திமுக எனக்கு துரோகம் செய்துவிட்டதாக நான் கூறவில்லை. அங்கிருந்து நான் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. எங்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. அதிமுக சார்பில் கூட்டணி குறித்து பேசும்போதுதான் எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும், தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஒன்று, இரண்டு இடங்களில் போட்டியிடமாட்டோம். அதிக இடங்களில்தான் போட்டியிடுவோம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியில் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார். மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு நேரடி உதவிகள் எதுவும் இல்லை. ஆனால், மறைமுக உதவிகள் உள்ளன. இவ்வாறு சரத்குமார் கூறினார்.