Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

மத்திய பட்ஜெட்: கோவை தொழில் துறையினரின் வரவேற்பும், அதிருப்தியும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் குறித்து கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா): மூலப்பொருட்களின் விலையேற்ற பிரச்சினையை சமாளிக்க இரும்பு பொருட்கள், ஸ்கிராப், செம்பு ஸ்கிராப் ஆகியவற்றுக்கு சுங்க வரியை குறைக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நேரடியான சலுகைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கரோனா கால பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்யுமாறு கேட்டிருந்தோம். அதற்கு ஏதும் அறிவிப்பு இல்லை. 6 கோடி குறு, சிறு நிறுவனங்கள் இருப்பதாக அரசு எண்ணிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கைக்கு ரூ.15,700 கோடி உதவி என்பது சொற்பமானதுதான்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு: இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் ஸ்டீலுக்கான சுங்க வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைப்பு, உலோகங்கள் மறுசுழற்சியாளர்களுக்கான இறக்குமதி தீர்வை வரும் 2022 மார்ச் 31 வரை விலக்கு, தாமிர ஸ்கிராப்புக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு, எம்எஸ்எம்இ துறை சார்ந்த தொழில் நிறுவனங்களின் கடன் தொகை சார்ந்த வழக்குகளை விரைந்து தீர்வு காண உதவுதல் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, உற்பத்தி துறை மேம்பாட்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு, தமிழகத்தில் சாலை வசதி மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம். குறுந்தொழில்கள், மோட்டார் பம்புசெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட 20 சதவீத இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும், உள்நாட்டு உற்பத்திக்கான தேவைபோக மீதியை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் எனும் குறுந்தொழில் முனைவோரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்: சொட்டு நீர் பாசன மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, ஜல் ஜீவன் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, வீட்டு கடன்களுக்கான மானியம் உயர்த்தியிருப்பது போன்ற அறிவிப்புகள் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவித்த அவசர கால கடன் நீட்டிப்பு அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார்: வரும் காலங்களில் ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்படும், மூலப்பொருட்களுக்கான சுங்கவரி 7.50 சதவீதமாக குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம். மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, குறைப்பதற்கான விரிவான அறிவிப்புகள் இல்லாதது, தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வங்கித் துறைக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.20 ஆயிரம் கோடி அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது, இதுவரை வங்கிகளால் எந்த உதவியும் கிடைக்காத குறுந்தொழில் முனைவோருக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: குறு, சிறு தொழில்களுக்கு உதவிடும் வகையில் அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. குறைந்த வட்டியில் குறுந்தொழில் முனைவோருக்கு தனி கடன் திட்டம் கேட்டிருந்தோம். அது சம்பந்தமான அறிவிப்பு இல்லை. குறுந்தொழில்களுக்கு உதவிகரமாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி, மின்சார வாரியம் தனியார்மயமாக்கல் அறிவிப்பால் வரும் காலத்தில் குறுந்தொழில்களுக்கு கடன்கள் கிடைப்பது அரிதாகிவிடும். அரசிடம் மின்சார வாரியம் இருப்பதால் குறுந்தொழில்களுக்கு மின்சார சலுகைகள் கிடைத்து வருகிறது. தனியார்மயமானால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன்: இதுவரை இறக்குமதி வரி ஏதும் விதிக்கப்படாத பருத்தி மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியானது பருத்தியை சார்ந்துள்ள ஒட்டுமொத்த ஜவுளித் துறைக்கும் பேரிடியாக விழுந்துள்ளது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். செயற்கை இழை ஜவுளித் துறையின் போட்டித் திறனை வலுவூட்டும் வகையில் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதில், ஜவுளித்துறைக்கு ரூ.10,683 கோடி ஒதுக்கியுள்ளது பாராட்டத்தக்கது.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன்: 3 ஆண்டுகளில் 7 ஒருங்கிணைந்த பெரிய ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே, வலுவான கட்டமைப்பு கொண்டுள்ள தமிழக ஜவுளித்துறை, அதில் இரண்டு மித்ரா பூங்காக்களை நிறுவ முயற்சி எடுக்க வேண்டும். இந்த முயற்சியின் மூலம், எஸ்எம்இ ஜவுளி நிறுவனங்கள் புது முதலீடுகளை இந்த பொதுகட்டமைப்பில் ஏற்படுத்தி, ஜவுளித் துறையின் முக்கிய தேவையான போட்டித்திறனுடன் கூடிய ஆலைகளை நிறுவலாம்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் சி.பாலசுப்ரமணியன்: எம்எஸ்எம்இ தொழில்களுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி வரி விகிதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 7 ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையும், திருப்பூரும் ஜவுளித்துறையில் அதிக பங்களிப்பை செய்வதால் இதில் ஒரு ஜவுளிப்பூங்கா கோவைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அது வந்தால் ஜவுளித் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தனியார் வாகனங்கள் 20 ஆண்டு காலமும், வணிக ரீதியான வாகனங்களுக்கு 15 ஆண்டு காலமும் மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் மையமாக கோவை உள்ளது. இந்த அறிவிப்பு பயன்பாட்டுக்கு வந்தால் ஆட்டோமொபைல் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x