

அடுத்து அமையும் திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் 50 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தீட்டப்படும் என தருமபுரியில் நடந்த மனுக்கள் பெறும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட தடங்கம் மேம்பாலம் பகுதியில் திமுக சார்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். முன்னதாக, கூட்டரங்க வளாகம் முழுக்க நடந்து சென்று பொதுமக்களிடம் ஸ்டாலின் மனுக்களை பெற்றார். பின்னர் மேடைக்கு திரும்பிய அவர், மனு அளித்தவர்களில் 9 நபர்களை தேர்வு செய்து, அவர்கள் வலியுறுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் குரலிலேயே பேச வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் பேசியது:
வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கு, முற்றுப்புள்ளி வைப்பதாக தேர்தல் அமைய வேண்டும். மேலும், அடுத்த அரை நூற்றாண்டுக்கான, தமிழகத்துக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் இந்த தேர்தல் அமைய வேண்டும். ஆட்சிக் காலம் 5 ஆண்டுகள் தான் என்றாலும் 50 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இவ்வாறான ஆட்சியை தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அதுபோன்ற ஆட்சியை நானும் வழங்குவேன். 44 வயதில் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றேன். மேயர் என்று கூறிக் கொள்வதை விட மக்களின் சேவகன், ஊழியன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியதுடன் அவ்வாறே பணியாற்றினேன். அப்போதைய என் பணிகளை வார இதழ் (கல்கி) ஒன்றும், ஆங்கில நாளிதழ் (தி இந்து) ஒன்றும் பாராட்டி எழுதி இருந்தன.
வேளாண் துறை பிரச்சினையை நம் மாநிலத்தின் பெரிய பிரச்சினையாக நான் கருதுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததும் அவை தீர்க்கப்படும். புதிய வேலை வாய்ப்பு, கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றில் திமுக அரசு அக்கறை செலுத்தும். விவசாயிகளுக்கு மழையாகவும், ஏழைகளுக்கு ஒரு கவளம் சோறாகவும், ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் நாளாகவும், தொழில் புரிவோருக்கு வளர்ச்சியாகவும் இருப்பேன். அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக திமுக அரசு இருக்கும்.
இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திமுக-வின் கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களான, எம் எல் ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எம்எல்ஏ-க்கள் செங்குட்டுவன், பிரகாஷ், சென்னை சைதாப்பேட்டை எம் எல் ஏ சுப்பிரமணியன், தருமபுரி முன்னாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.