5 ஏரிகளில் 11 டிஎம்சி.க்கு மேல் நீர் இருப்பு; சென்னையில் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

5 ஏரிகளில் 11 டிஎம்சி.க்கு மேல் நீர் இருப்பு; சென்னையில் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 11,318 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதால் அடுத்தாண்டு வரை சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழையாலும், கடந்த மாதம் பெய்த மழையாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

சென்னை குடிநீர் தேவைக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் தேவைப்படும். மேற்கண்ட 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி 11,318 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை புதிய ஏரியைத் தவிர்த்து மீதமுள்ள 4 ஏரிகளில் 6,109 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

சென்னையில் தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் ஏரிகளில் இருந்து 549 மில்லியன் லிட்டர், குடிநீர் வாரிய கிணறுகளில் இருந்து 4 மில்லியன் லிட்டர், வீராணம் ஏரியில் இருந்து 151 மில்லியன் லிட்டர், நிலத்தடி நீர் 20 மில்லியன் லிட்டர், மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் 73 மில்லியன் லிட்டர், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 33 மில்லியன் லிட்டர் பெறப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படுகிறது.

முழு கொள்ளளவு நீர் இருப்பு

இந்நிலையில், சென்னைக் குடிநீர் நிலவரம் குறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் ஏறக்குறைய முழு கொள்ளளவு நீர் இருப்பு இருப்பதால் அடுத்த 11 மாதங்களுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. மேலும், வரவுள்ள தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையைக் கருத்தில் கொண்டால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in