

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை யால் ரோஜா மலர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதலர் தினத்துக்கு இணையாக தற்போது 20 மலர் கள் கொண்ட ஒரு பஞ்ச் (கொத்து) ரோஜா மலர்கள் ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், கோவை உள் ளிட்ட குறிப்பிட்ட சில மலைப்பிரதேச மாவட்டங்களில் பசுமை குடில் (கிரீன் ஹவுஸ்) முறையில் ஏற்றுமதி ரக ரோஜா மலர்களும், பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் திறந்தவெளி முறையில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது.
பசுமை குடிலில் உற்பத்தியாகும் தாஜ்மகால், கிராண்ட் கலா, எல்லோ, பிங்க், ஒயிட் உள்ளிட்ட உயர்ரக வகை ரோஜா மலர்களை விவசாயிகள் சர்வதேச சந்தைக்கும், மதுரை, கோவை, சென்னை மற் றும் பெங்களூரு மலர் சந்தை களுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர். திறந்தவெளியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களை உள்ளூர் பண்டிகைகள், முகூர்த்த தினங்களை குறிவைத்து அனைத்து மாவட்ட மலர் சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து மஸ் பண்டிகை, புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட நாட்களில் மட்டுமே 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ஏற்றுமதி ரக ரோஜா மலர்கள் ரூ.250 முதல் ரூ.350 வரை விலை போகும். மற்ற நாட்களில் ஒரு பஞ்ச் ரூ.100 முதல் ரூ.150 வரைதான் அதிகபட்சமாக விலை போகும்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக எப்போதும் இல்லாத வகையில் அடைமழை யாக பெய்த வடகிழக்கு பருவமழை யால் ரோஜா மலர் சாகுபடி அதி களவு நடைபெறும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் தமிழகத்துக்கான 60 சதவீதம் ரோஜா மலர்கள் விற் பனைக்கு செல்கின்றன. தற்போது இங்கு கனமழையால் ரோஜா மலர் உற்பத்தி குறைந்ததால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு திடீரென்று கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாட்டுத் தாவணி பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறிய தாவது: சமீபத்தில் பெய்த கனமழை யால் ஓசூர் ரோஜா மலர்கள் வழக்க மாக வருவதை விட 50 சதவீதம் குறைந்துவிட்டது. அதனால், ஒரு பஞ்ச் ரோஜா மலர்கள் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன. பட்டன் ரோஜா கிலோ ரூ.250 முதல் ரூ.300-க்கு விற்கிறது. பூக்கள் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளதால் இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
ரோஜா விவசாயிகளுக்கு லாபமில்லை
ஓசூர் அருகே பாகலூரை சேர்ந்த ரோஜா ஏற்றுமதி விவசாயி சிவா கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் ரோஜா உற்பத்தி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில் ஓசூர் பகுதியில் 50 லட்சம் பூக்கள் அழிந்துள்ளன. இந்த மழையால் ரோஜா செடிகளில் ‘டவுனி மெல்யூ’ என்ற ஒருவகை நோய் வேகமாக பரவுகிறது. இந்நோய் தாக்கி செடிகளில் இலைகள் கொட்டி பூக்கள் உதிர்ந்து கீழே விழுகின்றன.
மனிதனுக்கு ‘சிக்குன் குன்யா’ வந்தால் எப்படி பழைய நிலைக்குத் திரும்ப 3 மாதங்கள் ஆகுமோ அதுபோல் ‘டவுனி மெல்யூ’ நோய் தாக்கிய ரோஜா செடிகளும் பழைய நிலைக்கு வர 3 மாதங்கள் ஆகும். ஒரு ஏக்கரில் முன்பு ஒரு மாதத்துக்கு 60 ஆயிரம் பூக்களை பறிப்போம். இப்போது வெறும் 20 ஆயிரம் பூக்களே கிடைக்கின்றன. தட்டுப்பாடு காரணமாக ரோஜாவுக்கு ‘திடீர்’ கிராக்கி ஏற்பட்டாலும், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. பாதிப்பை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கவலையுடன் தெரிவித்தார்.
‘டவுனி மெல்யூ’ நோயால் பாதிக்கப்பட்ட ரோஜா மலர்.