

இந்திய ரயில்வே தனியார்மயமாக்கத்தை எதிர்த்து எஸ்ஆர்எம்யு, எஸ்ஆர்இஎஸ், ஏஐஆர்எஃப் தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை, தாம்பரம், திருவள்ளூர், அண்ணனூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வேயில் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, தனியார் ரயில்கள் இயக்கம், ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு, நிரந்தரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தனியார்மயமாக்கத்தை கண்டித்து ரயில்வே ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து எஸ்ஆர்எம்யு சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே எஸ்ஆர்எம்யு தலைவர் சி.ஏ.ராஜாதர், சென்னைகோட்டச் செயலர் பால்மேக்ஸ்வெல் ஜான்சன் முன்னிலையில் பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து ராஜாதர் கூறியதாவது:
ரயில் பணிமனைகள், ரயில்வேதளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும்தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை தனியார்மயம் என்றபெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், ரயில்வே கட்டணம்பல மடங்கு உயரும். பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவர். எனவே தனியார்மயமாக்குவதை கைவிடவேண்டும். இந்த மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்புகள் இருக்கிறதே தவிர,மக்கள் நலன்களுக்கான அறிவிப்புகள் இல்லை என்றார்.
இதேபோல் எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்கம் சார்பில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பாஸ் முறையாக வழங்க வேண்டும், தொழிலாளருக்கு தரவேண்டிய பஞ்சப்படி, டி ஏ வழங்க வேண்டும், இரவு பணி அலவன்ஸ் வழங்க வேண்டும், நல்ல வருவாய் தரும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில், சென்னை - பெங்களூரு, சென்னை - திருவனந்தபுரம் வழித்தடங்களை தனியார்மயமாக்குவதை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல இணைச் செயலர் தயாளன், துணைப் பொதுச்செயலர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல துணைச் செயலர் பன்னீர்செல்வம், மண்டலப் பொருளர் வினோத்குமார், தாம்பரம் கிளைச் செயலர்பார்த்திபன், தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு, ஏஐஆர்எஃப் மற்றும் முன்னணி மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவள்ளூர், அண்ணனூரில் ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்ஆர்எம்யூ, ஏஐஆர்எப் மற்றும் திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்ஆர் எம்யூ திருவள்ளூர் பணிமனை தலைவர் ஏசுதாஸ், திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பாஸ்கர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.