

அன்மையில் நடந்த எழுத்துத் தேர்வின் முடிவில் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள்தான் அதிக அளவில் உள்ளது.என்எல்சி இந்தியா நிறுவனப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள எழுத்துத் தேர்வு முடிவில் வடமாநிலத்தவர்களே பெரும்பாலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
‘நவ ரத்னா’ அந்தஸ்து பெற்றுள்ள நெய் வேலியை தலைமையிடமாகக் கொண்டது என்எல்சி இந்தியா நிறுவனம். பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் மனிதவளம், நிதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு என 259 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வேண்டி கடந்த 13-03-2020 அன்று நிறுவன இணைய தளத்தில் அறிவிப்புகள் வெளியாயின. கரோனா பரவல் காரணமாக விண்ணப்பிக்கும் தேதி 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் எழுத்துத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
இறுதியாக, கடந்தாண்டு நவம்பர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை எழுத்துத் தேர்வு நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றன. இந்நிலையில், சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தேர்வின் முடிவு கடந்த 30-ம் தேதி அன்று, நிறுவன இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 259 காலியிடங்களுக்கு அடுத்தகட்ட நேர்முகத் தேர்விற்காக 1,582 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த சதவீதத்தில் மட்டும் தேர்வாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் தான் அதிக அளவில் உள்ளது.
இது தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கெனவே ரயில்வே, வருமானவரி, அஞ்சல் துறை, உளவுத்துறை உள்ளிட்டதுறைகளில் நடந்த தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதை போன்று, என்எல்சி இந்தியா நிறுவனத்திலும் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ஏற்கெனவே, என்எல்சியில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர் கள், இறந்தோர் வாரிசு, என்எல் சிக்காக வீடு நிலம் கொடுத்தோர் என பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனி யார்மய பங்களிப்பு என்ற கொள்கையின் அடிப்படையில், என்எல்சியில் பெரும்பாலான பணிகள் ‘அவுட் சோர்சிங்’ முறையில் விடப்பட்டு, அதிலும் வடமாநிலத்தவர்களே பணியமர்த் தப்பட்டு வருகின்றனர். தற்போது உயர் பதவிகள் முற்றிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது, போட்டித் தேர்வுக்காக தயாராகும் தமிழக இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் தொடர்ந்து என்எல்சியில் கடந்த 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், வரும் 8-ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் கடலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.