

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்க 11 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் (திங்கள்) அனுமதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் இங்கு வர தடை விதிக்கப்பட்டது.
தற்போது நோய்தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் இன்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை கும்பக்கரைக்கு வந்தனர். இவர்களுக்கு உடல் வெப்ப சோதனை செய்யப்பட்டு அதன்பின்பு அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அருவிப்பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக புதியதாக மின்சார வாகனமும் இயக்கப்பட்டன.
11 மாதங்களுக்குப்பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 8 முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி உண்டு.
அருவியில் குளிக்க ரூ.15ம், சிறுவர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.