Published : 01 Feb 2021 05:38 PM
Last Updated : 01 Feb 2021 05:38 PM

கரோனா நெருக்கடி நேரத்தில் சவால் மிகுந்த பட்ஜெட்: முதல்வர் பழனிசாமி வரவேற்பு 

சென்னை

உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒரு புதிய நிதி நிறுவனம் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மூன்று வருடங்களில் சுமார் ஐந்து லட்சம் கோடி ருபாய் வரையில் கடன் வசதி அளிப்பதற்குரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் பெரும்பயன் அடையும் என்று முதல்வர் பழனிசாமி பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா பெருந்தொற்று நோய் மற்றும் அதைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் உலக அளவில் மட்டுமன்றி, நமது நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பல சவால்களுக்கு இடையே 2021-2022ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சமர்ப்பித்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு உகந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக கோவிட் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்க மத்திய அரசு 35,000 கோடி ரூபாய் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். கரோனா பெருந்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து நமது நாடும், மாநிலமும் மீண்டு வருவதற்கு இது உதவும். இத்தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய நிதி உதவியை மேலும் உயர்த்தி அளிக்க வேண்டும் எனவும் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் 3,500 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் ஆகிய இரண்டு வழித்தடங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும். இதனை வரவேற்கும் அதே நேரத்தில், இத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து ஒத்துழைப்பு நல்கும் என உறுதியளிக்கிறேன்.

சென்னை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், கடல் பாசி உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற சிறிய மீன்பிடித் துறைமுகங்களின் மேம்பாட்டிற்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் சிறப்பாக நடைபெற்று வருவதாக மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நிதியை, அதாவது தமிழ்நாடு அரசு கோரியுள்ள 50% பங்கு நிதியை உடனடியாக அளிக்குமாறும், இன்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் செயல்படுத்திட ஒப்புதல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கெனவே மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று நிதியுதவித் தொகுப்புகளை வழங்கியது. இதில் தமிழ்நாடும் பெரும்பயன் அடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் விலையில்லா அரிசி மற்றும் பருப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் மூன்று வருட காலகட்டத்தில் ஏழு புதிய ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இவற்றுள் இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் எனவும், தென் மாவட்டங்களில் ஒரு ஜவுளிப் பூங்காவும், சேலம் மாவட்டத்தில் மற்றொரு ஜவுளிப் பூங்காவும் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்குக் கோரிக்கை வைக்கிறேன்.

உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒரு புதிய நிதி நிறுவனம் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இதன் மூலம் மூன்று வருடங்களில் சுமார் ஐந்து லட்சம் கோடி ருபாய் வரையில் கடன் வசதி அளிப்பதற்குரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் பெரும் பயன் அடையும்.

சர்வதேச நிதி நிறுவனம் கிஃப்ட் நகரத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் நிதி நகர திட்டத்தைச் செயல்படுத்திட உதவும் வகையில், தமிழ்நாட்டிலும் ஒரு சர்வதேச நிதி நிறுவனத்தை ஏற்படுத்திட மத்திய அரசு திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இத்தருணத்தில் முன்வைக்கிறேன்.

நகரப் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் மூலமாக 18,000 கோடி ரூபாய் செலவில் 20,000 பேருந்துகளை புதியதாக வாங்கிப் போக்குவரத்துத் துறைக்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடையும் பொதுப் போக்குவரத்து பேருந்து வசதிகள், அரசு நிறுவனங்கள் மூலமாகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மத்திய அரசின் திட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் பயனடையும் விதமாக நிதியுதவி வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசைக் கோருகிறேன்.

எனது கோரிக்கையை ஏற்று, ஆதி திராவிட மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான கல்வி உதவித் திட்டத்தில், மாற்றங்களைச் செய்ததோடு, இத்திட்டத்திற்கான போதிய நிதி ஒதுக்கீட்டை இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கியுள்ளது மனநிறைவை அளிக்கிறது. நமது நாட்டிலேயே அதிக அளவில் ஆதி திராவிட மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை வழங்கி வரும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு இது பேருதவியாகும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியானது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த வரி அளவு குறைக்கப்பட்டு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத மத்திய அரசின் மேல் வரியின் (Cess) அளவு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

இந்தச் சூழலில், மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி (Cess) மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் நிதி நிலையையும் பாதிக்கக்கூடியதாகும். எனவே, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, முந்தைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x