Published : 01 Feb 2021 05:14 PM
Last Updated : 01 Feb 2021 05:14 PM

வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி எஸ்.ஐ. - முதல்வர் இரங்கல்: ரூ.50 லட்சம் இழப்பீடு; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிப்பு

மதுபோதை இளைஞரால் கொல்லப்பட்ட தூத்துக்குடி ஏரல் எஸ்.ஐ. பாலு குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ரூ.50 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உடன் சென்று காயம்பட்ட காவலர் சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஐ. பாலு குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாலு நேற்றிரவு (31.1.2021 அன்று) காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ஏரல் கடைவீதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ஒருவர் தகராறு செய்வதாகக் கடையின் உரிமையாளர் தொலைபேசி வாயிலாகத் தகவல் தந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்சுப்பையாவுடன் அக்கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டு, இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரும் இன்று (1.2.2021) அதிகாலை இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்திரமடைந்த முருகவேல் என்பவர், சரக்கு வேனை ஓட்டிச்சென்று, இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் ஈடுபட்டு இருக்கும்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு இழப்பீடாக, ரூபாய் 50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூபாய் 2 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x