Last Updated : 01 Feb, 2021 05:02 PM

 

Published : 01 Feb 2021 05:02 PM
Last Updated : 01 Feb 2021 05:02 PM

தைப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை நிலவரம்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு

கோவை

தைப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

''தக்காளி

நாட்டின் மொத்தக் காய்கறி உற்பத்தியில், தக்காளி 11 சதவீதம் பங்களிக்கிறது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிவிப்பின்படி, 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.12 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, 205.73 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மொத்தத் தக்காளி உற்பத்தியில் 57 சதவீதம் பங்களிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கிறது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், தமிழகத்தில் தக்காளி சாகுபடி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, பூளுவப்பட்டி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து காணப்படுகிறது. வரும் வாரங்களில் கர்நாடகாவில் இருந்து காணப்படும் வரத்தே, விலை ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும்.

தக்காளிச் சாகுபடி அனைத்துப் பருவங்களிலும் செய்யப்பட்டாலும், தைப்பட்டத்திலேயே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்ய ஏதுவாக, ஒட்டன்சத்திரம் சந்தையில் 20 ஆண்டுகளாக நிலவிய தக்காளி விலை நிலவரத்தை ஆய்வு செய்தபோது, தரமான தக்காளி கிலோவுக்கு ரூ.15-18 பண்ணை விலையாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கத்தரி

இந்தியாவில் 2019-20ஆம் ஆண்டில் 7.36 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு, 127.77 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கத்தரிக்காய் உற்பத்தியில் மேற்கு வங்காளம், ஒடிசா, பிஹார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 69 சதவீதம் பங்களிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் கத்தரி சாகுபடியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, கோவை, மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளுக்கு மைசூரில் இருந்து கத்தரிக்காய் வரத்து காணப்படுகிறது.

இந்நிலையில் தைப்பட்டத்தில் விவசாயிகள் கத்தரிக்காய் விதைப்பு குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் மேற்கொண்ட ஆய்வில், அறுவடையின்போது கத்தரிக்காய்க்கு ரூ.30- 32 பண்ணை விலையாகக் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெண்டை

இந்தியாவில் பயிரிடப்படும் காய்கறிகளில் வெண்டைக்காய் முக்கிய ரகமாகும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் 5.13 லட்சம் ஹெக்டேரில், 61.76 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளம், குஜராத், பிஹார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 59 சதவீதம் பங்களிக்கின்றன.

தமிழகத்தில் கோவை, சேலம், தருமபுரி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெண்டை பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை சந்தைகளுக்குப் பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், வைகுண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து வெண்டை வரத்து காணப்படுகிறது.

தைப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெண்டைக்கு, அறுவடையின்போது கிலோவுக்கு ரூ.25- 27 வரை பண்ணை விலையாகக் கிடைக்கும் என்று, ஒட்டன்சத்திரம் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இதன் அடிப்படையில் விவசாயிகள் தக்காளி, கத்தரி, வெண்டை விதைப்பு குறித்த முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்''.

இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x