Last Updated : 01 Feb, 2021 02:17 PM

 

Published : 01 Feb 2021 02:17 PM
Last Updated : 01 Feb 2021 02:17 PM

இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படி திருமணம்

புதுச்சேரி

இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் பிஇ பட்டதாரி. கோவையைச் சேர்ந்தவர் பி.டெக். பட்டதாரி ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த ஆழ்கடல் நீச்சலில் விருப்பமுள்ள சின்னதுரை விரும்பினார். இதற்காக தனது உறவினரான புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் அரவிந்தை அனுகினார். அதையடுத்து ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் நடத்த முடிவு எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மணமகளின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஆழ்கடல் திருமணம் பற்றி எடுத்துரைத்துச் சம்மதம் பெற்றனர். அதைத் தொடர்ந்து மணமகளுக்கு ஆழ்கடல் நீச்சலில் பயிற்சி தந்தனர். அவரது பயிற்சியின்படி நீலாங்கரை அருகே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடலில் 60 அடி தூரத்தில் இந்தத் திருமணம் இன்று நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் இந்து முறைப்படி கூரைப்புடவை, பட்டு சட்டை மற்றும் வேட்டி அணிந்து படகில் சென்று போதிய பாதுகாப்பு வசதியுடன் ஆழ்கடலுக்குள் சுவாசக் கருவிகளைப் பொருத்திச் சென்றனர். ஆழ்கடலுக்குள் இருக்கும் செடிகளில் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது.

நீந்தியபடியே இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து நீந்தியபடியே மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். அதைத் தொடர்ந்து மணமகளுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைக் கடலிலேயே மணமகன் தெரிவித்தார்.

இத்திருமணம் நடந்தது பற்றி அரவிந்த் கூறுகையில், "கடந்த வாரமே திருமணத்தை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், கடல் சூழல் உகந்ததாக இல்லை. அதனால் இன்று நடத்தினோம். மணமகன் ஏற்கெனவே ஆழ்கடல் நீச்சல் அறிந்தவர். மணமகளுக்கு ஒரு வாரம் ஆழ்கடல் நீச்சல் கற்றுத் தந்தோம். அதையடுத்து மூன்று படகுகளில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றோம்.

பாரம்பரிய உடையுடன் கடலில் இறங்கினர். கடலில் இறங்கினாலும் பாரம்பரிய உடையில் மாற்றம் ஏற்படாமல் இருக்க வழிமுறைகளைக் கையாண்டோம். மாலை மாற்றி, தாலி கட்டிக் கடலில் பூத்தூவி திருமணம் நடத்தினோம். ஆழ்கடலில் திருமணம் முடிந்து கைகோத்து ஆழ்கடலில் இயற்கையை ரசித்தபடி மேலே எழும்பி வந்தனர். இவர்களின் திருமண வரவேற்பு சோழிங்கநல்லூரில் வரும் 13-ம் தேதி நடக்கிறது. வித்தியாசமாக நடத்த முடிவு எடுத்து முதல் முறையாக இத்திருமணம் கடலில் நடந்தது. இந்திய அளவில் இந்து முறைப்படி ஆழ்கடலில் நடந்த முதல் திருமணம் இதுதான்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x