முழு கொள்ளளவை தொடரும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையின் உட்புறத் தோற்றம். படம்: எம்.நாகராஜன்
அமராவதி அணையின் உட்புறத் தோற்றம். படம்: எம்.நாகராஜன்
Updated on
1 min read

கடந்த டிசம்பர் முதல் தொடர்ந்து 2 மாதங்களாக அமராவதி அணை அதன் முழு கொள்ளளவை தக்கவைத்து வருவது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையின் நீர் கொள்ளளவு 4 டிஎம்சி. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை, கடந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் எதிர்பாராத அளவு நீர்வரத்தைப் பெற்றது. இதன்மூலமாக தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டபோதும், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் அணையின் மொத்த நீர் கொள்ளளவு குறையாமல் இருப்பது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் அணைக்கு விநாடிக்கு 4000 கன அடி வீதம் தண்ணீர் கிடைத்தது. அதற்கு முன்பே அணையின் மொத்த கொள்ளளவும் நிரம்பி இருந்தது. எனவே, வரவாக கிடைத்த நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பாசனப் பகுதிகளில் நீர்வரத்து இருந்ததால், பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால், ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது அணைக்கு விநாடிக்கு 447 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 89 அடியாக உள்ளது. விவசாயிகளின் வேண்டுகோள் அடிப்படையிலும், அரசின் வழிகாட்டுதல்படியும் பாசனத் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in