

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி ஷேத்ர அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவ்வமைப்பு சார்பில் பொள்ளாச்சி அடுத்த கோவில் பாளையத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புப் பிரதிநிதிகள், தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையிடம் நிதி வழங்கினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளோம். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக நல்லாட்சி கொடுத்துள்ளது. பிரமதர் மோடிக்கு தமிழகத்தில் நல்ல மரியாதை உள்ளது. எனவே, எங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். திமுக தலைவர் ஸ்டாலின், கால் சென்டர் மூலமாக ஒரு லட்சம் புகார்களை மக்களிடமிருந்து பெற்றார். தொடர்ந்து, கிராம சபைக் கூட்டம் நடத்தி, மனுக்களை வாங்கினார். இப்போது, புகார் பெட்டி வைத்து, மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
இதுவரை அவர் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? வேலை தொடமாட்டோம் என்று கூறி ஸ்டாலின், தற்போது 8 கிலோ வேலை கையில் ஏந்தியுள்ளார். தமிழ்க் கடவுளை அவமானப்படுத்தியவர்கள், தற்போது தங்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளதாக கூறுகின்றனர். திமுகவின் அஸ்திவாரம் பலமிழந்து போயிருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.