

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு செவிலியர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்துவழங்கப்பட்டது. பெற்றோர் முகக்கவசம் அணிந்து தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து சமூக இடைவெளியை பின்பற்றி சொட்டு மருந்து போட்டுச் சென்றனர்.
நடமாடும் குழுக்கள்
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் சென்று சொட்டு மருந்து வழங்கின. இந்த பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
புலம்பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வருபவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடதுகை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.சென்னையில் 1,644 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் 6,700-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை 8 மணிஅளவில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி, பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு மருந்துகள் துறைஇயக்குநர் (டிபிஎச்) செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) நாராயணபாபு, ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) குருநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். பின்னர், சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
போலியோ முகாம் சிறப்பாக நடைபெறுவதால் தொடர்ந்து 17-வது ஆண்டாக தமிழகம் போலியோ பாதிப்பு இல்லாத நிலையை அடைந்துள்ளது. போலியோ முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற, கரோனா தொற்று நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன. பெற்றோரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
வீடு வீடாக சென்று..
தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளில் 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6.82 லட்சம் குழந்தைகளில் 6.44 லட்சம்குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்தை வழங்குவார்கள். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.