தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும்: கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி தகவல்

தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும்: கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி தகவல்
Updated on
1 min read

அதிமுக- அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை. அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக-வில் இல்லாத சசிகலா கட்சியின் கொடியை, அவர் பயணித்த காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். இதுதொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. இது செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

எனவே, சிலர் சுய நலத்துக்காக கூறும் கருத்துகளை ஏற்கமுடியாது. அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் பல்வேறு கோணங்களில் முயற்சி செய்தார். ஆனால், உண்மையானவர்கள் பக்கம் தான் தர்மமும், நியாயமும் இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர் கட்சியை கைப்பற்றுவதாகக் கூறுவது கேலிக்கு உரியது.

சசிகலாவை ஏன் அதிமுகவை விட்டு நீக்கவில்லை என சில கருத்து கூறுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உறுப்பினர் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போதும் கூட சசிகலா தன்னை புதுப்பித்து கட்சி உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. ஆக, கட்சியிலேயே இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்.

டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட நபர் அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி அமமுக. அந்த கட்சியுடன் அதிமுக இணைய வாய்ப்பு இல்லை.

அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தன்னை கட்சியில் இணைக்கக் கோரினால் வேண்டுமானால், அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை பரிசீலனை செய்யும். பரிசீலனை முடிவை ஏற்பதாக இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம். தகுதியற்ற நபர் என முடிவு செய்யப்பட்டால் அவரது மன்னிப்புக் கடிதம் குப்பைத் தொட்டிக்குத் தான் செல்லும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in