

புதுச்சேரியில் இனி காங்கிரஸ் இல்லை என்று மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் நியமன எம்எல்ஏ தலைமை தாங்கி பேசியதாவது:
நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரசு கூட்டுறவு ஊழியர்கள், அரசு சார்பு ஊழியர்கள் யாருக்கும் ஊதியம் இல்லை. மருத்துவமனைகளில் மருந்து இல்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை. ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்கள் இல்லை இப்படி 100 இல்லைகளை காங்கிரஸ் அரசு கொடுத்துள்ளது. ஆனால் புதுவை மக்கள் ஒரே ஒரு இல்லையைத்தான் சொல்ல போகிறார்கள். புதுவையில் இனி காங்கிரஸ் இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு இதே இடத்தில் மீண்டும் கூட்டம் நடக்கும். அப்போது பாஜக முதல்வர் தலைமையில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள். காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார்.
தாமரை மலர வேண்டும்
முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
தமிழர் அடையாளத்தோடு நட்டா வந்துள்ளது கோடிக்கணக்கான மக்களை மதிக்கும் விஷயம். தமிழர்களின் பண்பாடுகளை மாறாமல் காக்க வேண்டும் என்பதுதான் இந்த கட்சியின் கொள்கை.
கூட்டம் கூட்டி பேசுவதற்கான மாநாடு அல்ல. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், மாநில மக்களுக்காகவும் தான் கூடியுள்ளோம். எனவே அகில இந்திய தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர்.
முதல்வர் நாராயணசாமியால் தாழ்ந்துள்ள இந்த புதுவை மாநிலத்தை தலைநிமிர செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். புதுவை வளம்பெற வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் இணைந்தேன். புதுவை மேம்பட வேண்டும் என்றால் தாமரை மலர்ந்தாக வேண்டும். தாமரை மலரும்போது புதுவை மாநிலம் ஒளிரும். 2021-ம் ஆண்டு புதுவையில் தாமரை ஆட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் குரு சங்கர், ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் ஆடலரசன் கிருஷ்ணமூர்த்தி, சாம்ராஜ், பாஜக மீனவரணி முன்னாள் தலைவர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.