

ராமர் கோயில் கட்ட நிதி திரட்ட முயன்ற, வேலூர் இப்ராஹிம் கோவையில் இன்று முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று(31-ம் தேதி ) நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்டவும், மத்திய பாஜக அரசை ஆதரித்து தொடர்ந்து பேசி வருபவரும், ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவருமான வேலூர் இப்ராஹிம் இன்று கோவைக்கு வந்தார்.
தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனியாக எங்கும் செல்ல வேண்டாம் , நிதி வசூல், மேட்டுப்பாளையத்துக்குசெல்ல வேண்டாம் என அவரை காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால், அதை மீறி வெளியே செல்ல அவர் முயன்றார். இதையடுத்து செட்டிபாளையம் போலீஸார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹிம்மை இன்று கைது செய்தனர். சிறிது நேரம் தங்களது பாதுகாப்பில் காவல்துறையினர் வைத்திருந்தனர். பின்னர், பிணையில் அவரை விடுவித்தனர். அதன் பின்னர், அவர் சேலத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
மதநல்லிணக்கத்துக்கு சவால்
முன்னதாக கைது செய்யப்பட்ட போது, வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ கோவையில் ராமஜென்ம பூமியின் கோயில் வசூலுக்காக, மத நல்லிணக்க அடிப்படையில் நான் வந்தேன். காவல்துறையினர் என்னை செல்ல விடாமல் தடுக்கின்றனர்.
காரணம் கேட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுக்க இதையே கூறுகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு பெரிய சவாலாக தமிழகம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருக்கும் போது, இங்கு அரசியல் வாக்கு வங்கிக்காக சிலர் அமைப்புகள் தொடர்ந்து எனக்கு அச்சறுத்தல் விடுகின்றனர்.
காவல்துறையினர் அவர்களை ஒடுக்குவதற்கு பதில், என்னை ஒடுக்குகின்றனர். கோயில் வசூலுக்காக செல்லும் போது, காவல்துறையினர் என்னை கைது செய்தனர். என்னை விடுவிக்கும் போது மீண்டும் வசூல் செய்வேன். மத நல்லிணக்கம் என்பது தமிழகத்தில் தேவை.
இதை அப்படியே விட்டுவிட்டால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. நிச்சயம் மதநல்லிணக்க பூமியாக தமிழகம் தொடர்வதற்கு நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,’’ என்றார்.