பிஹார் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி: நிதிஷுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

பிஹார் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி: நிதிஷுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, சமூக நீதி, வளர்ச்சி, மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நிதிஷ் குமாருக்கு தமிழக தலைவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி (திமுக தலைவர்):

சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றிக்காக தங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் நல்ல நிர்வாகத்துக்கும், வளர்ச்சி சாதனைகளுக்கும், சமூக நீதியில் கொண்டுள்ள உறுதியான ஈடுபாட்டுக்கும் பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர். தங்களுக்கும், மகா கூட்டணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருப்பதற்கு எனது வாழ்த்துகள். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிஹார் மாநிலத்தில் சமூக நீதிக்கட்சிகள் பெரும் தோல்வியடைந்த நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றிபெற்று பீனிக்ஸ் பறவையாக உருவெடுத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றுக்காகவே பிஹார் மக்கள் உங்களுக்கு இந்த வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞர் அணி தலைவர்):

உங்களின் தலைமையையும், பிஹார் மாநிலத்தின் வளர்ச்சியில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அங்கீகரிக்கும் வகையில் பிஹார் மக்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை சமூக நீதிக்கும் வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர்):

இந்தியாவின் பாரம்பரியத் தையும் பண்பட்ட வரலாற்றையும் மதிக்காமல் மதவெறியைத் தூண்டும் வகையில் பிஹார் தேர்தலில் பாஜகவின் போக்கு இருந்தது.

இத்தகைய போக்குக்கு பலத்த அடி விழுந்துள்ளது என்பதை பாஜக தலைவர்கள் உணர வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

பிஹார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றியாகும். ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், சிறுபான்மையினர், தலித் சமுதாயத்தினர் ஆகியோரின் எண்ணங்களை இத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

தங்களின் நல்ல நிர்வாகத்துக்கும், வளர்ச்சி சாதனைகளுக்கும், சமூக நீதியில் கொண்டுள்ள உறுதியான ஈடுபாட்டுக்கும் பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in