அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் வசூலிக்க வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் வசூலிக்க வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இதர மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியுள்ளதாவது:


தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 30.11.2021 அன்று இதுசம்பந்தமாக தங்களுக்கு கடிதமும் எழுதியிருந்தேன்.

தற்போது இந்த கல்லூரிகளை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒப்படைப்பது என தமிழக அரசு அராசணை வெளியிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இதன் மூலம் தமிழக அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிக்கு இணையாக, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரி அனைத்தும் செயல்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இக்கல்லூரிகளில் தற்போது பயிலும் எம்.பி.பி.எஸ். / முதுநிலை மருத்துவம்/, பி.டி.எஸ். / முதுநிலை பல் மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்கு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். இந்த அரசாணை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசு கையகப்படுத்திய 2013ம் ஆண்டுகளில் அமலுக்கு வரும் உள்ளடக்கத்தில் வெளியிடப்பட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in