

திருஉத்தரகோசமங்கையில் உள்ள வேதவியாசர் தீர்த்தத்தை தெரிவிக்கும் கல்வெட்டு, ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்புச் சுவரால் மறைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை பொதுமக்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது: மங்களபுரியாகிய திருஉத்தரகோச மங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமியை தரிசிக்க வந்த மகான்கள் பலர். அதில் வியாசர், கவுதமன், சத் யானந்தன், அக்கினியன், கவுசிகன், காக புஜண்டர், மார்க்கண்டேயர், வெப்பிரு, ஆக்கினர், விசுவாமித்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இங்கு வியாசர் கடுந்தவம் புரிய அவரால் ஏற்படுத்தப்பட்ட நீர் நிலையே வியாசர் தீர்த்தம் என அழைக்கப்பட்டது. திருஉத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணிக்குச் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் கீழச்சீத்தை என்னும் இடத்தில் இத்தீர்த்தக்குளம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை விசேஷ நாட்களில், இத்தடாகத்தில் தீர்த்தம் எடுத்துச் சென்று, மூலவருக்கு அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அந்த தீர்த்தக் குளத்தை அடையாளம் காண்பதற்காக கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் வேதவியாசரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் பிரபலியம் என்று தலபுராணத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி, இதுபோன்ற வரலாற்று தடயங்களை சிதைத்து வருகிறார்கள். மேலும் ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரரால் எழுப்பப்பட்ட சுவரும் கல்வெட்டை மறைத்தபடி உள்ளது. எவ்வளவோ இடங்கள் இருந்தபோதும் அக்கல்வெட்டை மறைத்து ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு கல் வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இது வேதனைக் குரியது. இதுபோன்று தொன்மையான சான்றுகளை பாதுகாக்க அரசும், பொதுமக்களும் முன்வரவேண்டும் என்றார்.வியாசர் தீர்த்தக் கல்வெட்டை மறைக்கும் ஊரக வளர்ச்சித்துறை பணி குறித்த கல்வெட்டு.