Last Updated : 31 Jan, 2021 11:28 AM

 

Published : 31 Jan 2021 11:28 AM
Last Updated : 31 Jan 2021 11:28 AM

மள்ளப்புரம் மலைச்சாலையில் பேருந்து வசதி இல்லை; 60 கி.மீ. சுற்றிச் செல்லும் மலை கிராம மக்கள்: தொடரும் மூன்று மாவட்ட மக்களின் போக்குவரத்து பிரச்சினை

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் இருந்து சேடபட்டி ஒன்றியம் மள்ளப்புரம் செல்வதற்கான மலைச் சாலையில் பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 60 கி.மீ. சுற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியது உள்ளது. எனவே தேனி, மதுரை, விருதுநகர் என 3 மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமி புரம், எட்டப்பராஜபுரம், கண்டமனூர், கடமலைக் குண்டு, குமணந்தொழு, மந்திச்சுணை மூலக் கடை, மேகமலை, முருக்கோடை, முத்தாலம் பாறை, மயிலாடும்பாறை, நரியூத்து, பாலூத்து, பொன்னன்படுகை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேலும் கொம்புக்காரன்புலியூர், தென்பழநி, துரைச் சாமிபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட ஏராளமான உட்கடை கிராமங்களும் அமைந்துள்ளன.

பெரும்பாலான கிராமங்கள் மலையடி வாரத்திலேயே அமைந்துள்ளன. இதன் அருகில் அடர்வனங்களும், மலைத் தொடர்ச்சிகளும் இருப்பதால் இந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப ஒரே சாலையையே பயன்படுத்த வேண்டியது உள்ளது. மலைக்கு மிக அருகிலேயே மதுரை, விருதுநகர் மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக மயிலாடும்பாறையில் இருந்து மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டிக்கு சுமார் 21 கி.மீ. தூரத்திலும், பேரையூருக்கு சுமார் 35 கி.மீ. தூரத்திலும், எழுமலைக்கு 27 கி.மீ. தூரத்திலும் செல்லலாம்.

இதே போல் சதுரகிரி உள்ளிட்ட ஊர்களையும் குறுகிய தூரத்தில் அடையலாம். ஆனால் சாலைவசதி இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் க.விலக்கு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரைக்கும், உசிலம்பட்டியில் இருந்து எழுமலை, எம்.கல்லுப்பட்டி, ராஜபாளையத்திற்கும் சுற்றுப்பாதையில் சென்று வந்தனர். அதே போல் மதுரை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த சுற்றுப்பாதை வழியாகவே வந்து செல்லும் நிலை உள்ளது.

சுற்றுப்பாதை ஏறத்தாழ 60 கி.மீ. தூரம் என்பதால் நேரமும், பண விரயமும் அதிகரித்து வந்தது. எனவே தாழையூத்து மலைப்பகுதி வழியே சாலை அமைக்க வேண்டும் என்று தேனி, மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 1967-ம் ஆண்டு மயிலாடும்பாறையில் இருந்து மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் மள்ளப்புரம் வரை மலைப்பகுதியில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

பல்வேறு இடையூறுகளைக் கடந்து 1972-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. குறிப்பாக தாழையூத்து கணவாய் பகுதியில் ஒரு பக்கம் உயர்ந்த மலைகளும், மறுபக்கம் பள்ளத்தாக்காகவும் இருந்ததால் அப்பகுதியில் 12 அடி வரையே சாலை அமைக்க முடிந்தது. 9 கி.மீ. தூரத்திற்கு அதிக வளைவுகளும், குறுகிய சாலைகளும், மலைச்சரிவுகளுமாக உள்ளது. இருப்பினும் இந்த மலைப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் அதிகம் உள்ளதால் போக்குவரத்திற்கு வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.

கடந்த 2001-ல் உள்ளாட்சி அமைச்சராக இருந்த துரைராஜ் முயற்சியால் சாம்பல் நிற அணில்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதியில் தார் சாலைக்குப் பதிலாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் சாலையை அகலப்படுத்தவோ, போக்கு வரத்திற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவோ பாதுகாப்பிற்கான வழி முறைகளையோ மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதனால் இந்த குறுகிய சாலை வழியே இருசக்கர வாகனங்கள், கார், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. அதுவும் தேனி மாவட்ட எல்லையான தாழையூத்தில் கண்டமனூர் சரக சோதனைச்சாவடியும், மதுரை மாவட்ட எல்லையான மள்ளப்புரத்தில் சாப்டூர் சரக சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு, விசாரணைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

மயிலாடும்பாறை-மள்ளப்புரம் மலைச்சாலையில் மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி காவல் எல்லை முடியும் பகுதி.

கண்டமனூர், மயிலாடும்பாறையைச் சேர்ந்த பல மாணவர்கள், மதுரை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளில் அதிகம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த வழியே பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து தொடங்கப்படாததால் இருசக்கர வாகனங்களிலேயே இவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்று வருகின்றனர். மேலும் மூலவைகையிலிருந்து க.மயிலை ஒன்றியப் பகுதிகள் நல்ல நீராதாரத்தை கொண்டுள்ளதால் இலவம், தென்னை, முருங்கை, பருத்தி, கத்தரி, சோளம், மிளகாய், பூ போன்ற ஏராளமான பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இவற்றை சுற்றுப்பாதை வழியாக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மேலும் மருத்துவம், அவசரத் தேவைகளுக்காக இப்பாதையை பயன்படுத்த முடிவதில்லை. தொடர்மழை, இரவு போன்ற நேரங்களிலும் இந்த சாலையில் செல்ல முடிவதில்லை. இதனால் குறைவான தூரத்திலே அண்டை மாவட்டப் பகுதிகள் அமைந்திருந்தும் பல மடங்கு தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. தொடர் போக்குவரத்து இருந்தால்தான் அச்சாலை அடுத்தடுத்து மேம்படும் எனவே பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று மூன்று மாவட்ட பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து மயிலாடும்பாறையைச் சேர்ந்த கோபால் கூறுகையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இச்சாலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். 49 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தும் இன்னமும் பொதுப் போக்குவரத்து தொடங்கவில்லை. மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களே. இவர்களால் கார், வேன் போன்றவற்றை பயன் படுத்த முடியாது. எனவே பேருந்து போக்கு வரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

தாழையூத்தைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், கணவாய் 4-வது வளைவில் சாலையின் அகலம் குறைவாகவும், சரிவும், பள்ளத்தாக்காகவும் உள்ளது. இருப்பினும் மற்ற பகுதிகளில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கி பயணிக்கலாம். எனவே குறைவான அளவில் மினி பேருந்துகளை இயக்கலாம். குறுகலாக உள்ள இடங்களில் சாலையை ஒட்டியுள்ள பாறைகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என்றார்.

வனத்துறையினர் கூறுகையில், சாம்பல் நிற அணில் சரணாலய பகுதி அருகில் உள்ளதால் அதிக போக்குவரத்தை இப்பகுதியில் அனுமதிப் பதில்லை. மேலும் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில்தான் இப்பகுதி உள்ளது. அகலப்படுத்தி தடுப்புச்சுவர் உள்ளிட்ட பாது காப்பு ஏற்பாடுகளை செய்த பிறகே பொதுப் போக்குவரத்து தொடங்க முடியும் என்றனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று மாவட்ட மக்கள் போராடி பெற்ற சாலையில் தற்போது இருசக்கர, இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றன. மாவட்ட மற்றும் மக்கள் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்தின் உட்கட்டமைப்பு மிக அவசியம். எனவே காலமாற்றம், மக்கள்தொகை அதிகரிப்பு, மாறிவரும் தொழில்நுட்பம் போன்றவற்றை உணர்ந்து இவர்களுக்கான வசதியை செய்துதர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x