

மதுரை-போடி வழித்தட அகல ரயில் பாதைக்காக தேனி வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. வரும் ஏப்ரல் முதல் மதுரையில் இருந்து தேனி வரை ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
போடி-மதுரை வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனை அகலப் பாதையாக மாற்றும் பணி 2011-ல் துவங்கியது. இதற்காக 90 கி.மீ. நீளமுள்ள மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டன. ரூ.450 கோடி ஒதுக்கீட்டில் பல்வேறு கட்டங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் மதுரை-உசிலம்பட்டி இடையே 37 கி.மீ. பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான பாதையில் மலைப்பகுதி அமைந்துள்ளது. இருமலைகளுக்கு இடையே உள்ள இப்பாதையில் ரயில்கள் செல்வதற்காக இங்கு 23 மீ உயரம், 10 அடி அகலத்திற்கு பாதை அகலப்படுத்தப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை சோதனை ரயிலும் இயக்கப்பட்டது. கரோனா, வடமாநிலத் தொழி லாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் இப்பணியில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
தற்போது தேனி வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. நவீன இயந்திரம் மூலம் இதன் அமைவுத்தன்மை துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேனி வரை விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் ஏப்ரல் முதல் மதுரையில் இருந்து தேனி வரை ரயில்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. தேனி ரயில் நிலையத்தில் இருந்து போடி வழித்தடத்தில் உள்ள பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி பகுதிகளில் இப்பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சிக்னல் பிரிவில் இருந்து அடுத்தகட்டப் பணிகள் நடைபெறும். ரயில்வே கேட், ரயில் நிலையம், நடைமேடைகள் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிவடையும். இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரலில் மதுரையில் இருந்து தேனி வரை ரயில்களை இயங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனர்.தேனியில் பெரியகுளம் சாலை அருகே அகல ரயில்பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.