Published : 31 Jan 2021 11:28 AM
Last Updated : 31 Jan 2021 11:28 AM

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்ற கட்சிகளின் வலையில் சிக்குவார்களா? 

முருகானந்தம்

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பிற கட்சிகளில் இருந்து அழைப்பு வரும் நிலையில், அதை ஏற்று இணைவார்களா அல்லது தேர்தல் நேரத்தில் அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு பணியாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்ததையடுத்து திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் பகுதிவாரியாக நிர்வாகிகள் நியமிப்பது. பூத் கமிட்டி அமைப்பது முதல் பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் இறங்கினர். இந்நிலையில் கட்சி துவங்குவது இல்லை என ரஜினி அறிவித்ததையடுத்து தேர்தலுக்காக செய்யப்பட்ட ஆயத்தப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து அவசர அவசரமாக மன்றத் தலைமையிடம் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பிற கட்சிகளில் இணைய விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணையலாம். எப்பொழுதும் போல் ரஜினி ரசிகராக தொடரலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டிவிட்டு பின்வாங்கியதால் பலரும் அரசியலில் ஈடுபட முடிவு செய்து வருவது வெளிப்படையாக பல மாவட்டங்களில் தெரிய வந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி பிற கட்சிகள் ரஜினி மக்கள் மன்றத்தினரை வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மீண்டும் சென்னையில் கூட்டம்

பழநி நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளர் முருகானந்தம் இது குறித்து கூறியதாவது:

தலைவர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக சொல்லியதால் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளான பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர் வாகிகள் கூட்டம் மீண்டும் சென்னயில் நடைபெற உள்ளது. இதில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மன்ற நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளோம்.

பிற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. எந்த முடிவாக இருந்தாலும் மன்றத்தினருடன் ஆலோசித்துதான் முடிவெடுக்க உள்ளோம். தற்போது வழக்கம்போல் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலப்பணிகளை செய்துவருகிறோம். யார் எங்கு சென்றாலும் நாங்கள் என்றும் ரஜினியின் ரசிகர்கள்தான், என்றார்.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பட்டிரகு கூறுகையில், வேறு கட்சிகளில் இணையும் எண்ணம் இல்லை. தேர்தல் நேரத்தின்போது ரஜினி ரசிகர்கள் அவரது படத்தை பயன்படுத்தாமல், ரஜினி மக்கள் மன்ற பெயரை பயன்படுத்தாமல், அவரவர் அந்தந்த பகுதியில் தங்களுக்கு பிடித்த கட்சிகளோடு இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. இது மன்றத்தில் உள்ளவர்களின் சொந்த முடிவாகத்தான் இருக்கும், என்றார்.முருகானந்தம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x