21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் பெரியாறு அணைக்கு மின் வசதி

21 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாறு அணைக்கு மின் வசதி கிடைக்க உள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாறு அணைக்கு மின் வசதி கிடைக்க உள்ளது.
Updated on
1 min read

21 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாறு அணைக்கு மின் வசதி கிடைக்க உள்ளது. இதற்கான தொடக்க விழா நாளை (பிப்.1-ம் தேதி) கேரளாவில் நடைபெறுகிறது. பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வனப் பகுதியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அணைப் பகுதியின் மின்விளக்குகள், 13 மதகுகள் இயங்கின. கடந்த 1999-ம் ஆண்டு உயர் அழுத்த மின்கம்பியில் உரசி யானை இறந்தது. இதனால் பெரியாறு புலிகள் சரணாலயம் மின்சாரம் கொண்டு செல்லத் தடை கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி 2000-ம் ஆண்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக பொதுப்பணித் துறையினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பூமிக்குள் வயர்களைப் புதைத்து மின்சாரம் கொண்டு செல்லலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இதற்கும் பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணைப் பகுதிக்கு ஜெனரேட்டர் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு மின் இணைப்பு வழங்க கடந்த ஆண்டு அனுமதி கிடைத்தது. 5.85 கி.மீ. தூரத்துக்கு வயர்களை மண்ணில் புதைத்து மின்சாரம் கொண்டு செல்ல வனத்துறைக்கு ரூ.16 லட்சத்தை தமிழக அரசு செலுத்தியது. மேலும் கேரள மின்வாரியத்துக்கு ரூ.1.65 கோடி வைப்புத் தொகையும் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கின. கடந்த 4-ம் தேதி இப்பணிகள் முழுமை பெற்றன. இதைத் தொடர்ந்து வண்டிப்பெரியாறு எனும் இடத்தில் இதற்கான தொடக்க விழா பிப்.1-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ், பீர்மேடு சட்டப் பேரவை உறுப்பினர் பிஜிமோள், தமிழக, கேரளப் பொதுப்பணித் துறையினர் கலந்து கொள்கின்றனர்.முல்லைப் பெரியாறு அணை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in